திட்டங்கள்

சிறந்த நூல்களை வெளியிடும் நிதியுதவித் திட்டம்


தமிழில் சிறந்த நூல்கள் வெளியிடப்படுவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டுவருகிறது.

அரசு அச்சக மதிப்பீட்டின்படி நூலின் அச்சுச் செலவின் 60% தொகை அல்லது ரூ. 25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை நூலாசிரியர்க்கு நிதியுதவியாக இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 2011-12 ஆம் ஆண்டு முதல் நிதியுதவி பெறும் அளவு ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டு, இத்திட்டத்தின்படி நிதியுதவி பெற வரையறுத்த ஆண்டு வருமான வரம்பு ரூ.25,000 /-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சொல் வங்கி


ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை உருவாக்கவும் பழைய தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் மக்களிடையே புழக்கத்திலுள்ள சொற்களைத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளவும், தற்கால அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், புதிய பயன்பாட்டுத் தேவைக்கேற்பவும் சொற்களை உருவாக்கும் நோக்கிலும் சொல் வங்கித் திட்டம் உருவாக்கப்பட்டது.

இத் திட்டத்தின்படி மொழி வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் மாதம் ஒருமுறை கலந்துரையாடிப் புதிய சொற்களை உருவாக்கி அளிக்கின்றனர். (இத்திட்டத்தில் இதுவரை 62 கூட்டங்கள் நடத்தப்பெற்று 936 பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன).